Saturday, June 19, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை - 2010

இந்தியாவின் தொழில் மற்றும் வணிக நகரங்களுள் குறிப்பிடத்தக்கது கோவை என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் ஆகும். பேருந்து, தொடர்வண்டி, விமானப் போக்குவரத்து வசதிகளோடு நவீன அறிவியல் தகவல் தொழில்நுட்பங்களையும் கொண்டு வளர்ந்து வருகிறது கோயம்புத்தூர். இது கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.
கொங்கு மண்டலம்: இலக்கியம் - தொல்லியல் சான்றுகள்

வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு

குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று - கிடக்கும்

களித்தண் டலைமேவு காவிரிசூழ் நாடு

குளித்தண் டலையளவும் கொங்கு

* சங்ககாலத்தில் சேரர் மற்றும் வேளிரின் ஆட்சிப் பகுதியாக விளங்கிய கொங்குப் பகுதி, சங்க இலக்கியங்களில் சிறப்பாகப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படுகிறது. பண்டைய கொங்குச் சமுதாயம் பற்றிய செய்திகள் பலவும் அவற்றில் காணப்படுகின்றன. சங்ககாலத்தில், வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தின் சிறப்பிடமாகவும் கொங்குப் பகுதி விளங்கியிருக்கிறது. இப்பகுதியில் இரும்புக்காலம் ( கி.மு. 1000 முதலாக ) முதற்கொண்டு மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் பல கிடைத்துள்ளன.

*அகநானூற்றில் (அகம் 1 , 61) பாடப்பெறும் நெடுவேள் ஆவிக்கோவும் குறிஞ்சி நிலத்திற்குரிய முருகனும் நிலைகொண்ட பொதினி (பழநி) மலையைக் கொங்குப் பகுதி கொண்டுள்ளது.

* பதிற்றுப்பத்தில் (30 ,79) புகழ்ந்து கூறப்படும் சேரரின் அயிரைமலை (அயிரைமலை>ஐவர்மலை) கொங்குப் பகுதியில் உள்ளது.

· பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் ஆகிய சங்கப்புலவர்களால் பாடப்பெற்ற இயல்தேர்க் குமணனும், பெருங்கல்நாடன் பேகனும் (கடையெழு வள்ளல்களுள் இருவர்) வாழ்ந்த பகுதி கொங்குப் பகுதியாகும்.

* அகநானூறு, பதிற்றுப்பத்து ஆகியனவற்றில் குறிப்பிடப்பெறும் சங்ககால மன்னன் கழுவுளின் காமூர் (தற்போதைய காங்கேயம்) கொங்குப் பகுதியில் உள்ளது.

* புறநானூற்றில்(168 - 172) போற்றப்படும் பிட்டங்கொற்றனின் குதிரைமலை கொங்குப் பகுதியில் அமைந்துள்ளது.

tamil-name3

* விளங்கு புகழ்க் கபிலனையும் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையையும் பாடிய (புறம் 53) சங்கப்புலவர் பொருந்தில் இளங்கீரனார் வாழ்ந்த ஊரான பொருந்தில் கொங்குப் பகுதியில் உள்ளது. இப்பொருந்திலின் சிறப்பு அண்மையில் புதுச்சேரி மையப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட- தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களும் பங்கேற்ற-தொல்லியல் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்டது. இந்த அகழாய்வில் ஒருபானையில் 2 கிலோ நெல்மணிகள் கிடைத்துள்ளன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பலவகைக் கல்மணிகள், கண்ணாடி மணிகள், இரும்பாலான ஆயுதங்கள் ஆகியன வெளிக்கொணரப்பட்டுள்ளன. வாழ்விடப் பகுதியில் சங்ககாலத்தைச் சார்ந்த செங்கற் கட்டுமானங்களும், கண்ணாடித் தொழிற்கூடங்களும் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்டன.

* சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் (ஏழாம் பத்து) 'கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்' எனக் குறிப்பிடப்படும் தொழிற்கூட ஊர் தற்போது சென்னிமலைக்கருகில் கொடுமணல் என்னும் பெயரில் உள்ளது. இப்பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்திய அகழாய்வில் ஈமச்சின்னங்களில் ஏராளமான கல்மணிகள், இரும்பாலான ஆயுதங்கள், வெண்கலத்தாலான பொருட்கள், பானைக்குறியீடுகள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு வாழ்விடப்பகுதியில் அகழாய்வு செய்தபோது இரும்பு உருக்குலைகள், கல்மணித் தொழிற்கூடங்கள் ஆகியன இருந்தமைக்கான சான்றுகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. 2300 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழ்-பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகளும் அகழாய்வில் கிடைத்துள்ளன.

* நன்னூலை இயற்றிய சமணப்புலவர் பவணந்தி அடிகள் வாழ்ந்த தற்போதைய சீனாபுரம் (ஜீனர் புரம் > சமணர் புரம்) என்னும் ஊரும் அதற்கருகில் உள்ள சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லார் வாழ்ந்த நிரம்பையும், சமணக்காப்பியமான பெருங்கதையை உருவாக்கிய கொங்குவேள் வாழ்ந்த விசயமங்கலமும் கொங்குப் பகுதியில் அமைந்துள்ளன.

* இரும்புக்கால ஈமச்சின்னங்கள் கல்வட்டங்களாகவும் கற்குவியல்களாகவும் காணப்படுகின்றன. சங்ககாலத்தில் கொங்குப்பகுதியிலிருந்து பாலக்காட்டுக் கணவாய் வழியாக மேலைக்கடற்கரைப் பகுதிகளோடு வணிகம் மேற்கொள்ளப்பட்டது. வெள்ளலூர், சாவடிப்பாளையம், பொள்ளாச்சி போன்ற இடங்களில் கிடைத்த உரோமானியக் காசுகள் இவற்றை உறுதிசெய்கின்றன.

* தமிழகம் உரோம் நாட்டுடன் கொண்டிருந்த வணிகத்திற்கான உறுதியான சான்றுகள் கொங்குப்பகுதியில் கிடைத்துள்ளன. அதாவது, இந்தியாவிலேயே உரோமானிய நாணயங்கள் கொங்குப் பகுதியில்தாம் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

* சங்க இலக்கியச் சான்றுகளை உறுதிப்படுத்தும் வகையில் சேரமன்னர்களின் மரபை இலக்கியத்தில் சுட்டியவாறு அறுதியிட்டு உரைக்கும் தமிழ்-பிராமிக் கல்வெட்டுகள் கிடைத்துள்ள புகளூரும் இந்தியாவிலேயே இசைக்குறிப்பைத் தரும் காலத்தால் முற்பட்ட தமிழ்-பிராமிக் கல்வெட்டு உள்ள அறச்சலூர் என்னும் ஊரும் கொங்குப் பகுதியில் உள்ளன.

* கோவைக்கு அருகிலுள்ள பேரூர், போளுவாம்பட்டி என்னுமிடங்களில் மேற்கொண்ட தொல்லியல் அகழாய்வுகள் சங்ககாலத்தைச் சார்ந்த பலவகைக் கல்மணிகள், கண்ணாடி மணிகள், சங்காலான பொருட்கள், இரும்புக் கருவிகள், சுடுமண் உருவங்கள், காதணிகள், இரும்புக்காலப் பானைக்குறியீடுகள் போன்ற தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர்ந்துள்ளன.

* கொங்குப் பகுதியான சூலூர் என்னுமிடத்தில் கிடைத்துள்ள முத்திரை நாணயங்கள் சங்ககாலத்தில் தமிழகத்திற்கும் வட இந்தியாவிற்கும் இருந்த வணிகத் தொடர்பினை உறுதிசெய்கின்றன. மேலும் இவ்வூரில் கிடைத்த சங்ககால மண் அகலில் காணப்பெறும் குறியீடு ஒன்று சிந்துவெளி நாகரிகக் குறியீட்டினை ஒத்துள்ளதாக அறிஞர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார்.

* இரும்பு மற்றும் சங்ககாலத் தொல்லியல் தொடர்பான 250க்கும் மேற்பட்ட கள ஆய்வுக்குரிய இடங்கள், ஒருங்கிணைந்த கோவை மாவட்டப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.

* எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாகச் சேரர்களின் தலைநகரமான கரூர்வஞ்சி கொங்குப் பகுதியில் ஆன்பொருநை (அமராவதி) ஆற்றின் கரையிலமைந்திருந்தது.

* சங்க இலக்கியத்தில் 'வளங்கெழு முசிறி' எனக் குறிப்பிடப்பெறும் சேரர்களின் துறைமுகமான முசிறிப்பட்டினம், அண்மையில் கேரள வரலாற்றாய்வுக் கழகம் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் கா.இராசன், உதவிப்பேராசிரியர் முனைவர் வீ. செல்வக்குமார் ஆகியோரின் துணையுடன் நடத்திய அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்வழி, சங்க இலக்கியம் குறிப்பிடும் தமிழக வரலாற்றுப் பண்பாட்டுச் செய்திகளுக்குரிய சான்றுகள் வெளிப்பட்டுள்ளன. அகநானூறு் (149) 'பொன்னொடு வந்து கறியொடு பெயரும்' எனக் குறிப்பிடுவதற்கேற்ப இத்துறைமுகத்தில் ஏராளமான உரோம் நாட்டு மட்கலங்களும், பொன்னாலான பொருட்களும், சேரர் செப்புக்காசுகளும், செங்கல் கட்டடங்களும், படகுத்துறையும் அகழாய்வில் வெளிப்பட்டுள்ளன. முசிறித் துறைமுகம் கேரளக் கடற்கரையில் பேரியாற்றங்கரையில் அமைந்த துறைமுகமெனினும் கொங்கு நாட்டு அரிய கல்மணிகள் உரோம் நாட்டுக்கு இத்துறைமுகத்தின்மூலம்தான் கொண்டு செல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

* எனவே பண்பாட்டு, வணிகத் தொடர்பு மையமாகச் சங்க காலத்திலேயே விளங்கிய கொங்குப் பகுதியில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment