Friday, June 11, 2010

பெங்களூரில் இந்தியாவின் நீள ’ஹை’ ஹைவே




இது போன வருடம் இந்நேரம் எழுதியது. இதோ இன்று இந்த பாலத்தை (Bangalore Elevated National Highway) திறந்துவிட்டார்கள். பாலு திறக்க வேண்டியது. ம்ம்ம். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கமல்நாத் துவங்கிவைக்க வேண்டியதாகிவிட்டது.



தேசிய நெடுஞ்சாலை அமைந்த இந்தியாவின் நீளமான பாலம் இது தான் என்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் திறக்கப்பட்டது - இந்தியாவின் நீளமான பாலம். ஆனால், அது தேசிய நெடுஞ்சாலை அல்ல.



2008 செப்டம்பரில் முடியவேண்டிய பாலம். 2009 ஏப்ரலில் திறக்கப்படும் என்று நீட்டிக்கப்பட்டு ஒரு வழியாக இன்று திறந்துவிட்டார்கள். கட்டி முடிக்க ஆன செலவு அதிகமில்லை. 776 கோடி தான். கூடுதலாக 100 கோடி ஆனது என்கிறார்கள். அவதார் என்கிற மூன்று மணி நேரம் ஓடுகின்ற பொழுதுபோக்கு சினிமா எடுக்கவே 1200 கோடி ஆகும் எனும்போது, நாட்டிற்கு தேவையான சாலைக்கு 800 கோடி என்பது ஓகே.



இந்த பாலத்தில் மடிவாளா தாண்டி பொம்மன்னஹல்லியில் ஏறிவிட்டோம் என்றால் ஒரே மூச்சில் பத்து கிலோ மீட்டர் தள்ளி எலக்ட்ரானிக் சிட்டியில் இறங்கிவிடலாம். ஓசூர் செல்லவேண்டி இருந்தால், இந்த பாலத்திற்கு பிறகும் எங்கும் நிற்க வேண்டியதில்லை. பொம்மசந்த்ரா, சந்தாபுரா, அத்திப்பள்ளி என தொடர்ந்து இருக்கும் பாலங்களால் நிமிடங்களில் ஓசூர் வந்து சேர்ந்துவிடலாம்.



இரவு பாலம் முழுக்க தகதகவென வெளிச்சத்தில் ஒளிர்கிறது. இன்று முதல்நாள் என்பதால், சீரியல் செட் வேறு. ஒரு போஸ்ட்டில் மூன்று விளக்குகள். மார்கழி மாத பனியில், காலை நேரங்களில் இந்த வெளிச்சம் தான் சாலையை காட்டுகிறது.



பெங்களூர் சாலைகள் எல்லா இடங்களிலும் ஏறி ஏறி இறங்கும். அதன் மீது கட்டப்பட்ட இந்த பாலமும் ஏறி ஏறி இறங்குகிறது.



நடுவே பார்க்கிங் செய்ய ஒரு இடம் இருக்கிறது. இன்று அது பிக்னிக் ஸ்பாட் போல இருந்தது. சிலர் நண்பர்களுடனும், சிலர் கேர்ள் பிரண்ட்ஸ்களுடனும் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.



அதிகப்பட்சம் 80 கிலோமீட்டர் ஸ்பீடில் போகலாம் என்கிறார்கள். ஆனால், மக்கள் பறக்கிறார்கள். இந்த படத்தை பாருங்கள்.



தகவல் சொல்ல எலக்ட்ரானிக் டிஸ்ப்ளேகள், வாகன ஓட்டத்தை கண்காணிக்க கேமராக்கள், ஏதேனும் வண்டி நின்று விட்டால் மேலிருந்து கீழிறக்க கிரென் என ஏற்பாடுகள் பல.



டோல் கட்டியே இந்தியன் நொந்துருவான் போல இருக்கே? இந்த பாலத்தில் போகவும் கட்டணம் தான். பைக்கிற்கு பத்து, காருக்கு முப்பது. ஒரு மாசத்திற்கு என்று பாஸ் வாங்கிக்கொள்ளலாம். இது ஸ்மார்ட் கார்டில் வருகிறது. எலக்ட்ரானிக் டோலும் இருக்கிறது. அதாவது உங்கள் காரின் உள்ளே ஒரு சின்ன சாதனத்தை நிறுவிவிடுவார்கள். நீங்கள் கேட் பக்கம் வரும்போதே, கேட்டில் இருக்கும் இன்னொரு சாதனம் உங்கள் காரில் உள்ள சாதனத்துடன் தொடர்புக்கொண்டு அதற்கேற்றாற்போல் கேட்டை திறந்துவிடும்.

மேலும் டீட்டெயில்ஸ் இங்கே.

ஓசூர் போறவங்க, மேலே போனாத்தானே காசு’ன்னு கீழே போனாலும், அத்திப்பள்ளியில் பிடுங்கிவிடுவார்கள். ஆனால், நல்லவேளை அங்கு பைக்கிற்கு கிடையாது.



இன்றும், இன்னும் சில நாட்களும் டோல் கிடையாது. எல்லாரும் ஜாலியா ஏறி இறங்கிட்டு இருக்காங்க. வழக்கமான சாலையாகத்தான் மேலே பாலத்தில் தெரிந்தாலும், ஓரத்தில் போகும்போது, பக்கமிருக்கும் உயர்ந்த கட்டிடங்களால், நாம் இருக்கும் உயரம் உணர்ந்து, ஒரு கிறுகிறு உணர்வு வரத்தான் செய்கிறது.

படங்களை பெரிதாக காண க்ளிக்கவும். ஏதேனும் உயரமான பில்டிங் மேலிருந்தோ, ஹெலிகாப்டரில்(!) இருந்தோ எடுத்தால், இன்னும் அருமையாக வரும்.

ஏர்போர்ட் ரன்வே என்று நினைத்து, பைலட் யாராவது ப்ளைட்டை இங்கு இறக்கிவிடக்கூடாது.

No comments:

Post a Comment