Monday, June 14, 2010

செம்மொழியான தமிழ் மொழியாம்

ரஹ்மான் இசையமைத்து, கௌதம் மேனன் படமாக்கியிருக்கும் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான பாடல், என்னை பொறுத்தவரை அருமையாக வந்திருக்கிறது. என்ன தான் மாநாட்டு அரசியல் மீது, ரஹ்மானின் மேற்கத்திய இசையமைப்பின் மீது, பாடலை பாடியிருக்கும் வேற்று மொழி பாடகர்கள் மீது, படமாக்கிய கௌதம் மேனன் மீது எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும், இந்த பாடலின் வீடியோ திரும்ப திரும்ப பார்க்க தூண்டும்படி இருப்பது உண்மை.



குழந்தைகளுக்கு பிடித்திருக்கிறது (பள்ளிக்கூடம் மற்றும் சிறு குழந்தைகளை காட்டுவதால் இருக்கலாம்). இளைஞர்களுக்கு பிடிக்கும் (சாப்ட்வேர் பொண்ணா அஞ்சலி வருவதால் சொல்லவில்லை). ரொம்பவும் நவீனமாக இருப்பதால், பெரியவர்களை கவர்வது கஷ்டம் தான்.

கிட்டத்தட்ட 70 பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். டி.எம்.எஸ். இல் இருந்து ஜி.வி. பிரகாஷ் வரை. வழக்கம் போல், ரஹ்மான் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இரவு கூப்பிட்டு பாட வைத்திருப்பார். எல்லாவற்றையும் வெட்டி, ஒட்டி, கிட்டத்தட்ட மூன்று மாத கால உழைப்பில் வெளிவந்திருக்கும் இறுதி வடிவத்தை கேட்கும் போது, அழகாக தொகுக்கப்பட்டிருப்பதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு தெரிகிறது.

---

கலைஞர் எழுதிய பாடல் வரிகள். யார் யார் எந்தெந்த வரிகள் பாடினார்கள் என்பது அடைப்புக்குறிக்குள். பாடல் எம்பி3 வடிவில்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர், (டி.எம்.சவுந்தரராஜன்)
யாதும் ஊரே, யாவரும் கேளிர் (ஏ.ஆர்.ரஹ்மான்)
உண்பது நாழி உடுப்பது இரண்டே (ஹரிணி)
உறைவிடம் என்பது ஒன்றேயென (சின்மயி)
உரைத்து வாழ்ந்தோம்... உழைத்து வாழ்வோம்.... (கார்த்திக்)

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம் (ஹரிஹரன்)

போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே (ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்)

அமைதி வழி காட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம் (பாடகர் குழு)

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்... (ஏ.ஆர்.ரஹ்மான்)
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்... (பாடகர் குழு)

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்... (விஜய் ஜேசுதாஸ்)

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்... (பி. சுசிலா)

ஓல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு (நரேஷ் ஐயர்)

ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் (ஜி.வி.பிரகாஷ்குமார்)
சிந்தாமணியுடனே (பாடகர் குழு)

வளையாபதி குண்டலகேசியும் (டி.எல்.மஹாராஜன்)

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்... (பாடகர் குழு)

கம்ப நாட்டாழ்வாரும்
கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்துக்கும்
வித்தாக விளங்கும் மொழி (ப்ளேஸ் குழு)

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்... (பாடகர் குழு)

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து (டி.எம். கிருஷ்ணா)
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி (நரேஷ் ஐயர்)

ஓதி வளரும் உயிரான உலக மொழி... (ஸ்ரீநிவாஸ்)
ஓதி வளரும் உயிரான உலக மொழி... (டி.எம். கிருஷ்ணா)
நம்மொழி நம் மொழி... அதுவே (பாடகர் குழு)

செம்மொழியான தமிழ் மொழியாம்...
தமிழ் மொழி... தமிழ் மொழி... தமிழ் மொழியாம்... (ஸ்ருதி ஹாசன்)

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்... (பாடகர் குழு)

தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்...
தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்... (சின்ன பொண்ணு)

வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே...
வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே... (ஏ.ஆர்.ரஹ்மான்)

---



எந்த நோக்கத்திற்காக, ரஹ்மானை இசையமைக்க சொன்னார்கள் என்று தெரியவில்லை. உலக அளவில் சாதனை புரிந்த தமிழன், பாடல் உலக அளவிற்கு எடுத்து செல்லபட வேண்டும் என நினைத்திருக்கலாம். ரஹ்மான் அவருக்குரிய பாணியில் இசையமைத்திருக்கிறார். பாடல் கண்டிப்பாக பெரிதாக பிரபலமடையும்.

பாடலின் இசையில், தமிழக இசை கருவிகளை சேர்த்துக்கொள்ளாமல், மேற்கத்திய தாக்கம் அதிகம் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. பாடலில் பிரதானமாக இருப்பது கீ-போர்டும், கிட்டாரும். நம்ம மேளமும், நாதஸ்வரமும் இருக்கத்தான் செய்கிறது. இல்லாமல் இல்லை. எப்போதும் சொல்லப்படும் ’வரிகளை இசை அழுத்துகிறது’ என்னும் குற்றச்சாட்டு வந்துவிடக்கூடாதென்பதில் கவனமாக இருந்திருப்பது தெரிகிறது. ஆனாலும், ஆங்காங்கே அதிரடி அதிர்வை கொடுக்க ரஹ்மான் தவறவில்லை. ப்ளேஸ் & ஸ்ருதியின் ராப் உச்சரிப்பை மட்டும், இந்த செம்மொழி பாடலில் தவிர்த்திருக்கலாம். ஆனால், அதையும் தமிழ் அனுமதிக்கும் எல்லைக்கடந்த உச்சரிப்பு வடிவமாக எடுத்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் கர்னாடிக், சுஃபி போல.



பாடலை படமாக்கியிருப்பது - ’விண்ணைத்தாண்டி வருவாயா’ தொழில்நுட்பக்குழு. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ததை, எடிட் செய்திருப்பது ஆண்டனி. கலை: ராஜீவன். ’காக்க காக்க’ கேமராமேனாக வந்த கணேஷ், ஸ்கூல் வாத்தியராக வருகிறார். கல்லூரி ஹீரோ அகில், புது மாப்பிள்ளையாக வருகிறார். அங்காடி தெரு அஞ்சலி, மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவராக வந்து, கூகிளில் தமிழில் தேடுகிறார்.

ஹெலிகாப்டரில் படம் பிடித்திருக்கும் தமிழகத்தின் கடலோர பகுதிகள், ஆன்மிகத்தலங்கள் பார்க்க அழகாக இருக்கிறது. மகாபலிபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை காட்டுகிறார்கள். பாடிய பாடகர்கள் அனைவரும் நடித்தும் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த பாடலுக்காக ரஹ்மானும், கௌதம் மேனனும் பணம் ஏதும் பெற்றுக்கொள்ளவில்லை என்று கேள்விப்பட்டேன். மற்றவர்களும் அப்படியாகத்தான் இருக்கும். அவர்களாக ஆர்வத்துடன் நேரத்தை செலவிட்டு பணியாற்றிய பாடலில் குற்றம் சொல்லுவதும், பணியாற்றிய கலைஞர்களின் இனம், மொழியை கொண்டு அவர்களை விமர்சிப்பதும், தமிழராகிய நமக்கு தான் கேவலம்.

பாடலில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். கூடவே நன்றியும்.

No comments:

Post a Comment