Tuesday, June 22, 2010

ராவணன்(விக்ரம்)

வால்மீகியோ, கம்பரோ இருந்திருந்தால் கேஸ் போட்டு ஜெயிக்க முழு வாய்ப்புள்ள வகையில் ராமாயணத்தை, நவீன சினிமா மொழியில் மணிரத்னம் எடுத்திருக்கும் படம் - ராவணன்.



விக்ரம், ஐஸ்வர்யா ராய், ப்ரித்விராஜ், ப்ரியாமணி, பிரபு, கார்த்திக் - இவர்கள் யாருக்கும் இல்லாத ஆரவாரம் தியேட்டரில் ரஞ்சிதாவுக்கு தான் இருந்தது.

விக்ரம் ஆரவாரத்தோடு நடித்திருக்கிறார். ஆனாலும், இதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இதை எப்படி அபிஷேக் செய்திருப்பார் என காண ஆர்வமாக இருக்கிறேன்.

ஐஸ்வர்யாவுக்கு வயதாகிவிட்டது. எந்திரனில் தலைவர்தான் யங்காக இருப்பார் என நினைக்கிறேன். பாவம். இவரை தூக்கி போட்டு பந்தாடியிருக்கிறார் இயக்குனர்.

ராமாயண சம்பவங்களையும், கதாபாத்திரங்களையும் படம் முழுக்க குறியீடுகளாக வைத்தது சரிதான். அதற்காக, கார்த்திக்கை அனுமனாக காட்டுகிறேன் என்று மரம் மரமாக தாவ விட்டது, சிறுப்பிள்ளைத்தனமாக இருந்தது.

படத்தின் ப்ளஸ்கள் - ஒளிப்பதிவு, இசை, கலை. படத்தின் ஆரம்பத்தில் வரும் ஷாட்கள் உலகத்தரம். உதாரணத்திற்கு, படகிலிருந்து கழுகு பறக்கும் காட்சி, தண்ணீருக்குள் இருந்து தோணியை படகு நொறுக்கும் காட்சி, மரக்கிளையில் இருக்கும் புட்டானை கடக்கும் காட்சிகளை சொல்லலாம். நாம் ஏற்கனவே வேறு படங்களில் பார்த்த இடங்களாக இருந்தாலும், உடைந்த சிலை, மண்டபங்கள் என செட் போட்டு புதியதாக ஒரு உலகத்தை காட்டியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர். உடைந்த பாலத்தில் நடக்கும் சண்டைக்காட்சி, நல்ல படமாக்கம்.

உடை வடிவமைப்பும், சில பின்னணி இடங்களும் ஹிந்தி டப்பிங் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது. வசனங்கள் சுஹாசினி எழுதியிருந்தாலும், மணிரத்னம் எழுதியது போலத்தான் இருக்கிறது. அல்டிமேட் படங்களில் வருவதை போல, தலை தலை என்று திணிக்கபட்டிருக்கும் வசனங்கள்.

சிடியில் வந்ததை தவிர எக்ஸ்ட்ரா சில பாடல்களை வழக்கம்போல் படத்தில் அமைத்திருக்கிறார் ரஹ்மான். மிரட்டும் இசை. ஏற்கனவே சிலது கேட்ட மாதிரி இருந்தாலும். காற்று, மழை என காட்டுக்குள் ஈரமாக உட்கார்ந்திருக்கும் உணர்வு பல இடங்களில் வருகிறது.

இப்படி தொழில்நுட்ப சைடில் ஸ்ட்ராங்காக இருந்தும், தெரிந்த கதையென்பதால் சீட்டில் அழுத்தி உட்கார வைப்பது சிரமம்தான். வழக்கமாக மணிரத்னம் படங்களில், மற்றதில் இருக்கும் சினிமாத்தனமான காட்சிகளோ, வசனங்களோ இருக்காது. இதில் அப்படி சொல்ல முடியாது. எனக்கு சமீபகாலங்களில் மணிரத்னத்தின் எந்த படமும் முதல் முறை பார்க்கும்போது பிடித்ததில்லை. இதுவும் அப்படியே.

---

"எப்ப பாரு, மகாபாரதம், ராமாயணம்'ன்னே மணிரத்னம் படமெடுக்குறாரே?"

"இல்லாட்டி, ஒரு பையன் - ஒரு பொண்ணு லவ், ஒரு வீரமான ஹீரோ - கெட்ட வில்லன் சண்டை'ன்னு படங்கள் வரும். அதுக்கு இது ஒரு மாற்றம்."

"அதுவும் சரிதான்"

No comments:

Post a Comment